நீரிழிவின் நிலைகள் – 3 “P”
பொலிபேஜியா, பொலியூரியா, பொலிடிப்சியா என்பன் நீரிழிவின் 3 அடிப்படை நிலைகளாகும்.
பொலிபேஜியா (P 1) எனும் அடிக்கடி பசியேற்படும் நிலை –
ஆரம்ப கட்டத்தில், நீரிழிவுடையவர்கள் முறையாக உணவு உட்கொண்ட பின்னும் அடிக்கடி பசியை உணருவார்கள். இன்சுலின் குறைபாடு காரணமாக மனித உடலானது குளுக்கோசின் மூலம் பயன் பெற முடியாமல் போவதால் இது நிகழ்கிறது. இதன் காரணமாக மேலதிக உணவின் தேவைப்பாட்டை கலங்கள் மூளைக்கு அறிவிக்கின்றன. எனினும், நீரிழிவுடையவர்கள் எவ்வளவு அதிகமாக சக்கரை உட்கொண்டாலும் அவற்றின் பயனைக் கலங்கள் அடைய முடியாது போகிறது.
பொலியூரியா (P 2) அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை –
சிறுநீரிலுள்ள குளுக்கோசினை வடிகட்டுதலும் மேலதிக குளுக்கோசினை பின்னைய தேவைக்காக சேமித்து வைத்தலும் சிறுநீரகத்தின் செயற்பாடுகளில் அடங்கும். ஆயினும், குருதியில் அளவுக்கதிமாக சக்கரை சேரும் போது சிறுநீரகமானது முறையாக தொழிற்படத் தவறுகிறது. இதன் விளைவாக குளுக்கோசானது சிறுநீருடன் வெளியேற்றப்படுவதால் சிறுநீரின் அளவு அதிகரித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உருவாகுகிறது.
பொலிடிப்சியா (P 3) அல்லது தீராத தாக நிலை –
மேற்கூறப்பட்ட காரணங்களால் அதிகளவிலான நீர் சிறுநீராக வெளியேறிவிடுவதால் தீராத தாகம் ஏற்பட்டு அடிக்கடி நீரருந்த வேண்டிய நிலையும் உருவாகிறது.
கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மேலும் சில அறிகுறிகள் –
இவை பொதுவாகப் புறக்கணிக்கப்படும் ஆரம்ப நிலை அறிகுறிகளாகும். இவற்றை அனுபவிக்க நேரிட்டால் வைத்தியரை அணுகுவது உசிதமாகும்.
நிறை குறைவடைதல் –
உடலின் சக்தித் தேவைப்பாட்டிற்காக கலங்கள் கொழுப்புச் சேமிப்பினை உடைத்து குளுக்கோசாக மாற்றி வழங்குகின்றன. இந்த செயல்முறையானது நிறைக் குறைவை ஏற்படுத்துகின்றது.
இலகுவில் களைப்படைதல் –
சக்திக் குறைபாடானது உடலை வெகுவாகக் சோர்வடையச் செய்கிறது.
இலகுவில் ஆறாத காயங்கள் –
காயங்கள் ஆறுவதற்கு சாதாரணமானவர்களை விடவும் அதிக காலம் எடுக்கும்.
அடிக்கடி தொற்று ஏற்படுதல் –
குருதியில் காணப்படும் மேலதிகமான குளுக்கோஸ் உடலில் காணப்படும் நுண்ணுயிர்களுக்கு அதிக சக்தியினை வழங்குவதால் நீரிழிவுடையவர்கள் பற்கள் சம்பந்தமான சிக்கல்கள், சிறுநீரகக் கோளாறுகள், காதில் ஏற்படும் தொற்றுகள் போன்றவற்றிற்கு அடிக்கடி முகம் கொடுக்க நேரிடும்.
பார்வைக் கோளாறு –
கண்களிலுள்ள இரத்த நாளங்கள் சிதைவடைவதால் பார்வைக் கோளாறுகள் ஏற்படலாம்.
மறுமொழி இடவும்