உடலின் பிரதான சக்தி மூலம் குளுக்கோஸ் ஆகும், முக்கியமாக மூளைக்கு இது அவசியமானது. நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் மூலம் குளுக்கோஸ் உடலினுட் செல்கின்றது. உடல் நேர்த்தியாகச் செயற்படுவதற்குத் தேவையான குருதிச் சக்கரையின் அளவைப் பேணுவதற்கு இன்சுலின் எனப்படும் ஹார்மோன் உதவி புரிகின்றது. இன்சுலினின் வேலையானது, குளுக்கோஸைக் கலங்களினுட் செலுத்தி, கலங்களுக்கு சக்தியளித்து, நமது உடற் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவி புரிவதே.
குருதிச் சக்கரையின் அளவு சாதாரணமான மட்டத்தில் பேணப்பட வேண்டும். விரதம் இருந்த நிலையில் 100 mg/dL ஐ விடக் குறைவாகவும், உணவு உட்கொண்ட 2 மணி நேரங்களின் பின் 140 mg/dL ஐ விடக் குறைவாகவும் பராமரிக்கப்பட வேண்டும். குளுக்கோஸின் அளவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கும் நிலையில், உங்கள் உடற் தொழிற்பாடு பாதிக்கப்பட்டு நீங்கள் சிறப்பான ஆரோக்கிய நிலையில் இருப்பதாய் உணர மாட்டீர்கள்.
மாப்பொருள் மற்றும் சக்கரை உட்கொள்ளும் அளவுகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாப்பொருட்களும்; சக்கரையுமே குருதிச் சக்கரையின் அளவைக் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறன. குறைவான குருதிச் சக்கரையின் அளவும்கூட உடற்தொழிற்பாட்டுப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. இந்த நிலைமையானது ஹைப்போகிளைசீமியா என்றழைக்கப்படுவதோடு, பசி, படபடப்பு, வியர்த்தல், நடுக்கம் மற்றும் மயக்கம் போன்ற உணர்வுகளையும் தோற்றுவிக்கும். அதிகமான குருதிச் சக்கரை அளவும் கேடான விளைவுகளை ஏற்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளைச் சேதப்படுத்தும். பொதுவாக, மோசமாகப் பராமரிக்கப்பட்ட உயர் குருதிச் சக்கரை காரணமாக பார்வைக் குறைபாடு, விரைவில் தொற்றுக்களுக்கு உள்ளாதல், மெதுவாக ஆறும் காயங்கள், மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற கெடுதல்கள் உண்டாகின்றன.
குருதிச் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் படிமுறைகள்
- ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை இதுவாகும். உங்களுக்கு நீரிழிவு நிலை இருந்தால், உங்கள் உணவுப் பழக்கங்கள் குருதிச் சக்கரை அளவில் நேரடியான பாதிப்புச் செலுத்தும். உட்கொள்ளும் உணவு வகையில் மட்டுமல்லாது, உணவின் அளவிலும்,உணவு அட்டவணையிலும் அவதானம் செலுத்துவது அவசியமாகும். சக்கரை செறிந்த உணவுகளுக்குப் பதிலாக பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது மிகவும் உகந்தது.
- சுறுசுறுப்பாக இருத்தல்
குருதிச் சக்கரை அளவைக் கட்டுப்படுத்த வழமையான உடற் பயிற்சி அத்தியாவசியமானது. உடற் பயிற்சி செய்யும் போது தேவையான சக்தியைப் பெற தசைகள் சக்கரையைப் பாவிக்கின்றன. இது, உடலானது இன்சுலினை வினைத்திறனுடன் பாவித்து குருதிச் சக்கரையின் அளவை நிலைப்படுத்த உதவுகின்றது.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை
ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, மதுபானப் பாவனையை மட்டுப்படுத்துவது என்பன உள்ளடங்குகின்றன. மன அழுத்தத்தின் போது உடல் சில ஹார்மோன்களைச் சுரக்கச் செய்வதன் விளைவாக குருதிச் சக்கரையின் அளவு கூடுகிறது. மதுபானமோ இன்சுலின் சுரப்பைக் கூட்டி குருதிச் சக்கரை அளவைக் குறைக்கின்றது. இந்நிலைமையானது நீரிழிவுடையவர்களின் குருதிச் சக்கரையின் ஒழுங்கமைப்பை சீர்கெடுக்கிறது.
- குருதிச் சக்கரை அளவைக் கண்காணித்தல்
குருதிச் சக்கரையின் அளவை வழக்கமாகக் கண்காணிப்பது அத்தியாவசியமானது. அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் அல்லது ஆய்வகங்களில் அல்லது வீட்டில் சுய பயன்பாட்டுக் கருவிகள் மூலம் இதைக் கண்காணித்து குருதிச் சக்கரை அளவு, இயல்பான நிலைமையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம.
மறுமொழி இடவும்