Current Date:டிசம்பர் 30, 2024

சிற்றுண்டிகளும் நொறுக்குத் தீனிகளும்

சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகளைச் சுவைக்கும் ஆசை ஒருபுறமும்  ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை பேண வேண்டிய தேவை மறுபுறமும் என இரண்டையும் சமாளிப்பது இலகுவானதல்ல. நீரிழிவுடையவர்களுக்கு இது இன்னும் கடினமான விடயம். ஆனால் சிற்றுண்டிகளும் அவசியமானவையே! தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், நீரிழிவுடையவர்கள் 4 அல்லது 6 தடவைகள்  சிறிய அளவில் உணவுகளை உட்கொள்வதன் மூலம் 3 வேளை முழு உணவு உட்கொள்வதை விட குருதிச் சக்கரையின் அளவை தளம்பல் இல்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள கூடியதாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இங்கே நாம் உண்ணும் சிற்றுணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

சிற்றுண்டிகளில் மாப்பொருள் குறைவாகவும் நார்ப்பொருள், புரதம் மற்றும் பயனுள்ள கொழுப்புகள் கூடியதாகவும் இருக்கவேண்டும். கடைகளிலிருந்து வாங்கப்படும் சிற்றுணவுகள் வீட்டில் தயாரிக்கப்படும் சிற்றுணவுகளைப் போல் ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஏனெனில், வீட்டிலே தான் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் முற்றாக நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
சீனியற்ற சிற்றுண்டிகள் சில…
1. அவித்த முட்டை
புரதச்சத்து நிறைந்த முழுமையாக அவிக்கப்பட்ட முட்டை எளிமையான, ஆரோக்கியமான, சிறந்த சிற்றுணவாகும். பயமின்றி எந்த நேரமும் இதை உட்கொள்ளலாம்.
2. ‘பெரி’ மற்றும் பாதாம் தூவிய யோகட்
நீரிழிவுடையவர்கள் விரும்பியுண்ண சாதாரண ‘யோகட்’ பாதுகாப்பானது. ‘பெரி’ பழ வகைகளை சேர்த்து இன்னும் சுவையூட்டிக் கொள்ளலாம். ‘பெரியில்’ செறிந்துள்ள அன்டிஆக்சிடைட்கள்; குருதியில் குளுக்கோசின் அளவைக் குறைக்க உதவும் ஹார்மோனைச் சுரக்கின்ற சதையியின் கலங்கள் அழற்சியடையாமலும் சிதையாமலும் காக்கின்றன. மேலும் பாதாம் சேர்ப்பதன் மூலம் மேலதிகமான 15 விட்டமின்கள் மற்றும் கனியுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
3. ‘சியா’ விதைகளுடனான ‘புடிங்’
‘சியா’ விதை ஒரு அற்புதமான உணவு. குருதிச் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவல்ல புரதம், நார்ப்பொருள், ஒமேகா 3 கொழுப்பமிலம் என்பன ‘சியா’ விதைகளில் செறிந்துள்ளன. ‘சியா’ விதைகளால் ‘புடிங்’ செய்ய, முதலில் அவ்விதைகளை நன்கு நீரில் ஊற வைத்து, வடித்து பின் முழுமையாக உலரவிட வேண்டும். பின்பு ‘டார்க் சொக்லட்’ தூள் சேர்த்து ‘புடிங்காக’ தயார் செய்து கொள்ளவும். பின்னர், குளிரூட்டியில் வைத்து பரிமாறலாம்.
4. சோளப் பொரி
வீட்டில் தயாரிக்கும் சோளப் பொரி நீரிழிவுக்கு உகந்ததாக மட்டுமன்றி ஆரோக்கியமான ஒரு முழுத் தானிய உணவாகவும் திகழ்கிறது. ஒரு கோப்பை சோளப் பொரியில் 31 கலோரிகள் மட்டுமே உள்ளன. சோளப் பொரியைச் சிற்றுண்டியாய் சாப்பிடும் போது குருதிச் சக்கரையின் அளவையும் உடற்பருமனையும் ஒருங்கே கட்டுப்படுத்தலாம்
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன