நீரிழிவு என்றாலே பலரும் பயந்து நடுங்கும்; ஒரு நோய் என்றாகிவிட்டது. சிகிச்சைகள் ஆண்டாண்டுகளுக்கு நீடிப்பதாலும் நீரிழிவை முறையாக பராமரிக்காமையால் நேரும் சிக்கல்களாலும் இவ்வாறானதொரு பீதி; மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. உண்மையில் நீரிழிவானது, முறையான கட்டுப்பாட்டினால் சிக்கல்களைக் குறைத்துக் கொண்டு பராமரிக்கப்படக் கூடிய ஒரு நிலையே. நீரிழிவின் அறிகுறிகளை அறிந்திருப்பதோடு நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் வெற்றிகரமாக அதனைக் கையாள முடியும். ஆனால் பலரும் நீரிழிவின் பலவிதமான சிக்கலான நிலைகளை, உதாரணமாக பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவற்றைக் கடந்த பின்பே இந் நோயின் பாதிப்பை அறிந்து கொள்கின்றனர்.
நீரிழிவைப் பற்றி அறிந்து கொள்வோம்
குருதியிலுள்ள குளுக்கோசினை ஒழுங்குபடுத்தக் கூடிய தகைமையை உடல் இழப்பதன் மூலம் நீரிழிவு தோற்றம் பெறுகின்றது. குருதியிலுள்ள சக்கரையின் அளவை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம்தான் என்ன?
கலங்களின் முறையான தொழிற்பாட்டிற்குத் தேவையான சக்தியின் மூலமாக குளுக்கோஸ் காணப்படுகிறது. சதையியில் உருவாக்கப்படும் ஹார்மோனான இன்சுலின் குருதியில் குளுக்கோசின் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ஓவ்வொரு கலங்களும் தமது திறனான இயக்கத்திற்காக போதுமான அளவு குளுக்கோசினை பெற்றுக் கொள்வதை இன்சுலின் உறுதிப்படுத்துகிறது.
மனித உடலில் காணப்படும் கலங்களானது உடலிலுள்ள சக்கரையை சக்தியாக மாற்றுவதோடு மேலதிக சக்கரையை கல்லீரலில் சேமிக்கின்றது. இன்சுலின் சுரக்கப்படுவதன் மூலம் குருதியிலுள்ள சக்கரையின் அளவைச் சரியாகப் பேண முடிகிறது. ஆயினும், இன்சுலின் சுரக்கப்படாமலேயே இருப்பதால், அல்லது போதிய அளவான இன்சுலின் சுரக்கப்படாமல் இருப்பதால், அல்லது சுரக்கப்படும் இன்சுலின் முறையாக செயற்படாமல் இருப்பதால் குருதியில் குளுக்கோசின் அளவு ஒழுங்குபடுத்தப்படாமல், குளுக்கோசின் அளவு அதிகரித்துக் கொண்டு சென்று நீரிழிவு ஏற்படுகின்றது.
உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பார்வையில் ஏற்படும் கோளாறு, சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
மறுமொழி இடவும்